பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அரசியல் 98

பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள். 451

நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும்; அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும். 452 மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும். இவன் இன்னவன் எனப்படும் சொல்லானது அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும். 453 ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தை யொட்டியதாகவே அறிவு உண்டாகும். 454 மனம் தூய்மை யாதலும், செய்யும்தொழில் தூய்மை யாதலும் ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒட்டியே வரும். 455 மனத்திலே தூய்மை உடையவர்களுக்கு எஞ்சி நிற்பதான புகழ் முதலியவை நன்றாக ஆகும் சேர்ந்த இனம் தூய்மையானவர்க்கு நன்மையாகாத செயல் யாதுமில்லை. 456

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும். 457

சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும். 458

மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும் மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும். 459

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை, தீய இனத்தைவிட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை. 460