பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க.

'முதன்மையும், தொன்மையும் வாய்ந்த தமிழர் பண்பாட்டில் உலக வாழ்க்கைக் கூறுகள் கருக்கொண்டன. கருக்கொள்ளல் இயல்பு. அக்கரு, தெய்வப்புலவராகிய திருவள்ளுவருக்குப் புலனாயிற்று. ஆகவே, அவர்பால் உலகநூல் ஒன்று மலர்ந்ததென்க'

வள்ளுவரின் பார்வையின் உயிர்ப்பு உலகம் ஒரு குலம் என்பதே.

உலகம் ஒரு குலம் என்பது பழந்தமிழர் பண்பாட்டினின்றும் முகிழ்த்த மிக நவீனமான குறிக்கோளாகும்.

அக்குறிக்கோள் திருவள்ளுவரில் படிந்து நின்று வளர்ந்து ஒரு சீரிய உலக நூலாயிற்று. அந்நூலின் உள்ளுறை நுண்ணியதாய்ப் பல பேரறிஞரிடம் புகுந்து புகுந்து பல மொழிகளில் பரிணமித்தது. இவ்வாறு திருவள்ளுவர் கருத்துப் பெருகிப் பெருகி இந்நாளில் விஞ்ஞானத்தில் விரவி மார்க்ஸியமாகவும், தெய்வீகத்தில் கலந்து காந்தியமாகவும் பரவியுள்ளது. விஞ்ஞான மார்க்ஸியமும், தெய்வீக காந்தியமும் ஒன்றிய ஒரு கொள்கையே இக்கால உலகை ஒருமைப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இதை உணர்ந்து தொண்டாற்ற நம்நாடு முற்பட்டால் உலகம் நலம் பெறும் என்று உறுதி கூறுவார் திரு.வி.க.