பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 150

சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்லவேண்டும். 711

சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே, சொல்ல வேண்டும். 712 தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்களாக, ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்; அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. 713

அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளி யினர் ஆகவேண்டும் அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல்போல ஆகிவிடவேண்டும். 714 அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது, சிறந்த நன்மை தருவதாகும். 715

விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர்முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன் இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம். 716 குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உடையவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம்பெற்றுத் தோன்றும். 717 சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும். 718 நல்ல அறிவாளர்கள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாகப் பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும். 719 தம்போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப்பற்றி விரிவாகப் பேசுதல் அங்கணத்துள்ளே அமுதத்தைக் கொட்டியதுபோலப் பாழாகிவிடும். 720