பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 192

கள்ளின்மேல் ஆசைகொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள். 921

அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக! 922 எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும் அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின்முன் என்னவாகும். 923 'கள்' என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, நாண் என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக்கொள்வாள். 924 தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும். 925

உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர். 926 கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளுரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர். 927 கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, யான் உண்டு அறியேன் என்று பொய் கூறுவதைக் கைவிடுக. 928 கள்ளுண்டு களித்தவனைக் காட்டி இஃது நினக்கும் ஆகாது என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப்போல் முடியாத செயலாகும். 929 கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்டான் அல்லவோ அப்படிக் காணும்போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ? 930