பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 20

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணிரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும். 71 அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர். 72 அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர் பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர். 73 அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும். 74 இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர். 75

அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர் ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும். 76 எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும். 77 உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலைநிலத்திலே காய்ந்தமரம் தளிர்த்தாற்போல நிலையற்றதாம். - 78 உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் புற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? 79 உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும். 80