பக்கம்:திருக்குறள் உரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

தவத்திரு பொன்னம்பல அடிகளார்

அருள் நெறித்தந்தை தமிழ்மாமுனிவர் நமது குருமகா சந்நிதானம் அவர்கள் திருக்குறள் நெறியைப் பட்டி தொட்டி எங்கும் பரவும் வகை செய்தார்கள்; திருக்குறள் பேரவை கண்டு ஒல்லும் வகையில் எல்லாம் திருக்குறள் தொண்டு ஆற்றினார்கள்; திருக்குறள் காட்டிய துறவு நெறியைத் தம் வாழ்நாளில் உயர்த்திப் பிடித்து அளவிடற்கரிய பெருமை பெற்றார்கள்; திருக்குறளின் தெளிவாய் வாழ்ந்த நமது மகாசந்நிதானம் அறம், பொருள் இரண்டிற்கும் அற்புதமாய் உரை தீட்டி உள்ளார்கள்.

"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்."

என்ற குறளுக்கான விளக்கவுரை இதுவரை எந்த உரைகாரரும் சிந்திக்காத புதிய சிந்தனை! கற்பு உடல் சார்ந்தது என்று எண்ணுகின்ற மரபைத் தகர்த்து விட்டு உயிர் சார்ந்தது என்று கூறியிருப்பது புதிய நோக்கு. அதனால்தான் அதைப் பிறர் காத்தல் அரிது; சம்பந்தப்பட்ட உயிர்தான் காக்க வேண்டும் என்ற 'தற்காத்து' என்பதற்கான விளக்கம் முழுமையாக ஏற்புடையது.


'கொண்டாற் பேணல் ’’ என்பது காதல் இன்பம் குறைபடாதவாறு ஒழுகி வழங்கும் வழி தன் கணவனின் கற்புக்குத் துணையாய் அமைதல் என்ற விளக்கம் உடலியல், உளவியல் கோட்பாட்டின்படி ஏற்புடையதாக விளங்குகின்றது.


"சொற்காத்தல்-உண்மையும் இலாமையும் குறைகளும் குற்றங்களும், ஊடலும் மற்றவர் அறியாதவாறு பாதுகாத்தல்."