பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

திருக்குறள் கட்டுரைகள்


ஆண்மை, ஆண் தன்மை; பெண்மை, பெண் தன்மை, ஆண்மையை வீரத்திற்கும், பெண்மையை அன்பிற்கும் ஒப்புக் கூறுவது உலக வழக்கு. என்றாலும், ஆண்மை என்பது வீரத்திற்கும் வலிமைக்கும் மட்டும் வேண்டுவதன்று; அஃது அன்புக்குஞ் சகிப்புத் தன்மைக்குங்கூட வேண்டப்படும் ஒன்று. அப்போதுதான் அந்த ஆண்மை சான்றாண்மையாக மாறுகிறது.

ஆண்மை என்ற சொல்லுக்கு ஆளுந் தன்மை என்பது பொருள். வாளாண்மை வாளை ஆள்வதும். தாளாண்மை தாளை ஆள்வது, வேளாண்மை (வேளை) மண்ணை ஆள்வதும், சான்றாண்மை தன்னை ஆள்வதுமாகும். ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாகக் கருதுவது நற்குணங்களில் ஒன்று. நற்குணங்கள் பலவற்றைப் படைத்தோர் நல்லோர்! அக்குணங்களை ஆள்பவர் ஆண்மையுடையோர். அக் குணங்களில் எதுவுந் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடாமல் அடக்கி ஆண்டு வருபவர் சான்றாண்மையுடையோர். சான்றாண்மை உள்ளவரே சான்றோர். சான்றோர் என்பவர் உயர்ந்தோர். உயர்ந்தோரையே உலகம் என்பர்.

உலகின் பிற நாடுகள் யாவும் (மெஜாரிடிக்கு) மிக்க எண்ணிக்கைக்கு உயர்வு தருகின்றன. தமிழகம் மட்டும் (மைனாரிடிக்கு) குறைந்த எண்ணிக்கைக்கு உயர்வு தருகிறது. இந்த உண்மையை, “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” என்று தமிழ்த் திருமறையும், “சீலம் இனிதுடையான் ஞாலம் எனப்படுவான்” என்று திரிகடுகமும் கூறி மெய்ப்பிக்கின்றன. இந்தக் கருத்து, இன்றைய ஜனநாயகக் கொள்கையுடைய நாடுகளை நடுங்க வைத்து விடும்.

சான்றாண்மை என்பது, மற்றவர் பின்பற்றும்படி நடந்து காட்டிய ஆண்மை என்றும், சான்றோர் என்பவர் பிறருக்குச் சான்றாக வாழ்ந்தோர் என்றும் பொருள் கூறினாலும் தவறாகாது. என்றாலும், சான்ற என்ற