பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது அறிவு?

25


பொல்லாத வியாபாரிகள் அதிக அறிவுடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.

நேர்மையாகத் தொழில் செய்கிற உத்தியோகத்தர்களைவிட, இலஞ்சம் வாங்கித் தொழில் செய்யும் உத்தியோகத்தர்களுக்கு மிக்க அறிவு வேண்டியிருக்கிறது.

உடலை வருத்தி, உழைத்துழைத்து உண்ணுகின்ற கிராம மக்களைவிட, உழைக்காது உண்டு வாழ்கின்ற நகர மக்கள் மிகவும் அறிவுடையார்களாகத் தோன்றுகிறார்கள்.

பொதுநலங் கருதித் தொண்டு செய்து வருகின்ற உண்மையான உழைப்பாளிகளைவிட, தந்நலங் கருதி பொதுத் தொண்டு செய்வதாக நடிக்கின்ற தீய மக்களிடத்து அதிக அறிவு காணப்படுகின்றது.

நெறி தவறாது வாழ்க்கை நடத்திவரும் பெண்களைவிட, நெறி தவறி வாழ்வை நடத்தும் பெண்கள் மிக அறிவுடையவர்களாகத் தோன்றுகிறார்கள்.

முடிவாகக் கூறுமிடத்து, “யோக்கியர்களைவிட அயோக்கியர்களே மிக்க அறிவுடையவர்களாகக் காணப் படுகிறார்கள்” எனக் கூறலாம். “நல்ல மனிதன்” என்றால், “பாவம்! ஒன்றும் தெரியாதவன்” என்றும் “பொல்லாத மனிதன்” என்றால், எவராலும் ஏமாற்ற முடியாதவன் என்றும் பொதுவாக நம்மிடையே வழங்கி வருகிற ஒரு வழக்கும் இதனை மெய்ப்பிக்கும்.

அவ்விதமாயின், “எது அறிவு? எவரிடத்துக் காண்பது அறிவு? பொல்லாத மக்களிடத்திலிருந்துதான் அறிவு ஒளி வீசுமா? நல்ல மக்களிடத்திலிருந்து அஃது ஒளி வீசாதா?” என்ற கேள்விகள் நம்மிடையே எழும்.

இக்கேள்விகளைப் பலரிடத்தும் கேளுங்கள். வருகின்ற விடை உங்கள் அறிவுப்பசிக்கு ஏற்ற உணவாக இருக்