பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

திருக்குறள் கட்டுரைகள்


நன்மையுடையதாகும் என்பது பொருள். இரந்து பெற்ற செல்வத்திற்குப் பெருமை இல்லையாதலின், வேறு முயற்சி செய்து பொருள் தேடுவதே சிறப்பு என்பது கருத்து.

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவி னிழிவந்த தில்

என்பது மற்றொரு குறள். தனக்காக என்று இரவாதிருக்கும் ஒருவன் நீர் வேட்கையால் இறக்கப்போகும் பசுவைக் கண்டு இரங்கி, “பசுவிற்கு நீர் கொடுங்கள்” என்று பிறரிடத்தில் இரப்பானாயின், அவனுடைய நாவிற்கு அதைவிட இழிவு தருவது வேறொன்றுமில்லை என்பது பொருள். அறஞ்செய்ய வேண்டின் தன் முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு செய்யவேண்டுமேயன்றிப் பிறரிடத்து இரந்து பெற்றுச் செய்யலாகாது என்பது கருத்து. இரப்பது இழிவு என்றதால், இரந்து வாழ எண்ணுவது மனதிற்கு இழிவு; இரக்க நடப்பது காலிற்கு இழிவு: ஏந்திப் பெறுவது கைக்கு இழிவு; பெற்று உண்பது வாய்க்கு இழிவு; பெறக் கேட்பது நாவிற்கு இழிவு-என்பதும் அறியப்பெறும்.

இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்

என்பது மற்றும் ஒரு குறள். இவ்வுலகத்தைப் படைத் தவன், இரந்துண்டு உயிர் வாழ வேண்டும் என்றெண்ணிச் சிலரைப் படைத்திருப்பானானால், அவன் இரந்து உண்டு உயிர் வாழ்கின்ற மக்களைப் போலவே எங்கும் திரிந்து அலைந்து துன்பப்பட்டுக் கெடுவானாக என்பது பொருள். எவரையும் அவ்வாறு எண்ணிப் படைப்பதில்லை என்பது கருத்து. இதனால் இரந்துவாழும் தொழிலானது மக்கள் முயற்சியின்மையால் தாமே தேடிக்கொள்ளும் இழி தொழில் என நன்கறியலாம்.