பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

திருக்குறள் கட்டுரைகள்


உழைக்க முடியவில்லை, உழைப்பதற் கிடமில்லை, உடலுக்கு நலமில்லை, உணவுக்கு வழியில்லை என்பதாக உண்மையைக்கூறி இரந்துண்பதே இத்தகைய இழிந்த செயலாகக் கருதப்படுமானால், பணமுடிப்பு என்றும், உண்டியல் என்றும், திருப்பதிக்கு என்றும், தேசபக்திக்கு என்றும், சமூகத்திற்கு என்றும், சீர்திருத்தத்திற்கு என்றும் பொய்யாகக் கூறி இரந்துவாழ்வது, எத்தகைய கடுமையும் கொடுமையுமான இழிசெயலாகும் என்பதை எண்ணிப் பார்த்தே உணரவேண்டி இருக்கிறது.

இரப்பது இரப்பவர்க்கு மட்டும் இழிவல்லை; அவர்களைச் சார்ந்து இருக்கும் உறவினர்க்கும் இழிவு; அவர்கள் வாழும் நாட்டிற்கும் இழிவு; நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கும் இழிவு என்பதே நமது கருத்து. இரப்பதற்காக இரப்போர் வெட்கப்படுவதைவிட, கொடுப்பதற்காகக் கொடுப்போர் அதிகமாக வெட்கப்படவேண்டும். ஒருவன் எழுநூறு பேருக்குச் சோறு கொடுத்ததைப் பெருமையாகக் கொள்வதைவிட மானக்கேடாகக் கொள்வது மிகவும் நல்லது. உண்மையான பெருமை அவன் வாழ்கின்ற நாட்டில் இரந்துவாழ எவரும் இல்லாதிருப்பதேயாகும்

இரப்போரை நோக்கி ‘இரப்பது இழிவு’ என்று சொல்லிக் கொண்டிருப்பதைவிட இரப்போரில்லாதிருப்பதற்கு அடிப்படையைக் காண்பதே அறிவுடைமையாகும். இத்தகைய தொண்டினை ஒருவன் ஒருநாள் செய்யினும், இது வாழ்நாள் முழுவதும் பல்லாயிரம் பேருக்கு மன மகிழ்வாய்க் கொடுக்கும் கொடையைவிட மிகப் பெருங்கொடையாகக் கருதப்பெறும் என்பது அறிஞர்களின் முடிவு.

“இரவு” என்று ஓர் அதிகாரமும், “இரவச்சம்” என்று மற்றோர் அதிகாரமும் வகுத்து, இரத்தலின் தன்மையையும் அதன் இழிவையும் கூறிய ஆசிரியர்