பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடியும் குறளும்

47


மூன்றாவது கேள்வியும் பாருங்கள்!

காதல் வேறு; காமம் வேறு. காதலால் பெறுவது இன்பம்; காமத்தால் பெறுவது துன்பம் காதல் மக்களிடத்தும், காமம் மாக்களிடத்தும் தோன்றுவது. மாக்களிடத்துத் தோன்றும் காமம் மக்களிடத்துத் தோன்றுமாயின் மக்களும் மாக்களாகி விடுவர். ஆகவே, காதல் விரும்பத் தக்கதும், காமம் வெறுக்கத் தகுந்ததுமாகும். “காமம் கொடியது?” என்று கூறவந்த திருவள்ளுவர், “அது எவ்வளவு கொடியது?” என்று விளக்க, ஒரு உவமையும் கூற முன் வந்தார்.

உள்ள பொருளைக் கொண்டுதானே இல்லாத பொருளை விளக்கியாக வேண்டும் இதற்காக அவர் உலகப் பொருள்கள் அனைத்தையும் தேடினார். கிடைக்க வில்லையோ, பொருந்தவில்லையோ, ஒப்பவில்லையோ தெரியவில்லை. கடைசியாக அவர் ஒரு உவமைப் பொருளைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றார். அந்த ஒரே உவமைப் பொருள் என்ன தெரியுமா? “கள்”.இந்தக் காணும் பொருள் கிடைத்த உடனே அந்தக் காணாப் பொருளை விளக்க எண்ணி, “கள்ளினுங் காமம் கொடியது” எனக் கூறிவிட்டார்.

கள் மிகவுங் கொடியது என்பதை மேலே கூறியவைகளால் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், காமம் அதை விடக் கொடியதுதானா? என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று. “கள்” என நினைத்துக் கொண்டால் போதை வருவதில்லை. கள்ளின் அருகிலிருந்து அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தாலும் போதைவருவதில்லை. ஆனால், காமம் அப்படியில்லை. நினைத்தாலும் போதை வந்துவிடும். பார்த்தாலும் போதை வந்துவிடும். ஆகவே தான், “கள்ளினுங் கொடிது காமம்” என்பது வள்ளுவர் வாக்கில் வந்தது போலும். எப்படி அகப்பொருளை விளக்கப் புறப்பொருளைக் காட்டிய அவரது பேரறிவு?