பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


திருக்குறள் கூறுகின்றது. ‘முகநக நட்பதே’ இக்காலத்திற் சிறப்பாகக் கொள்ளும் நட்பாக இலங்குகின்றது பொய் சொல்லாமல் ஒரு நாளும் வாழ்க்கையை இனிதாக நடத்த முடியாது என்னும் அளவிற்கு உலகம் இன்று மாறி நிற்கிறது பெருவேகத்தோடு இவ்வகையில் மாறி நின்றுள்ள இவ்வுலகில், ஆயிரவர்க்கொருவராதல் திருக்குறள் நெறியைப் பின்பற்றித் தாம் பெறும் பயனை மற்றவர் பெற உணர்த்தும் செயலில் முனைந்து நின்று வருகின்றனர். அத்தன்கையாராலேயே இன்னும் உலகம் அழியாமல் இருக்கின்றது என்று அறநெறி நிற்போர் அறைகுவர். உண்மை அதுவாயின், நம் முத்தமிழ்க் காவலர், உலகம் அழியா திருக்குமாறு அதைப் பாதுகாக்கும் காவலரும் ஆகின்றனர் எனலாம்.

சான்றாண்மையைக் குறிக்கோளாகக் கொண்டு, கயமையின் நீங்கி, அறிவறிந்து, கூத்தாட்டவைக் குழாத்தற்றே பெருஞ் செல்வம் என்பதால் அளவாகச் செல்வம் ஈட்டி, இரத்திலை இகழ்ந்து, குடி முதலிய தீய பழக்கங்களுக்காளாகாமல், அளவாக உழைத்து, ஊக்கத்துடனிருந்து, வீரங்குன்றாமல்,சொல்வதுபோலச் செயலாற்றி, மறைமொழியாம் திருக்குறளை மறவாமல் நினைவிற் கொண்டு வாழ்வதால் அமர வாழ்வு எய்தலாம் என்ற திரண்டு கருத்தைப் பத்துக் கட்டுரைகளாக, அழகிய, இனிய, ஆழ்ந்த, நுண்ணிய, செவ்விய நடையில் முத்தமிழ்த் காவலர் நமக்கு வகுத்து வழங்கியிருக்கிறார். ஏற்கென்வே “திருக்குறள் புதைபொருள்” என்ற அவருடைய நூலைப் பயின்றவர்க்கு, அவருடைய ஆராய்ச்சித் திறன், பொருளாழம் கண்டுணர்த்தும் ஆற்றல் முதலியன்வெல்லாம் தெரியுமாதலால், இச்சுவடியில் அவற்றை எடுத்தியம்புதல் மிகையாகும் என் அஞ்சி விடுத்தேன்.

எல்லாக் கட்டுரைகளிலும், இறுதியாக அமைந்துள்ள “மறைமொழி” என்னும் கட்டுரை பொன்னேபோல் போற்றத்தக்கதாதலின் அதை முதற்கண் படித்து இன்புறுமாறு நண்பர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.

திருக்குறள் வாழ்வால் அமர வாழ்வு எய்தி நிற்கும் முத்தமிழ்க் காவலர் உலகம் அழியாமைக்காக என்றும் வாழ்ந்த இத்தகைய சுவடிகள் பல ஆக்கித்தருவார்களர்க. வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்க் காவலர்!