பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102


முயற்சி செல்வத்தை உண்டாக்கும், முயற்சி இன்மை வறுமையில் ஆழ்த்திவிடும்.

சோம்பிக்கிட; மூதேவி வந்து தங்குவாள்; சுறுசுறுப்பாக இயங்கு; சீதேவி வந்து உதவுவாள்.

விதி கூட்டவில்லை என்றால் யாரும் பழிக்க மாட்டார்கள். அறிய வேண்டியவற்றை அறிந்து திறம்படச் செயலாற்றாவிட்டால் பழிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது.

ஊழ் வந்து உதவவில்லை என்றாலும் முயற்சி செய்து கடின உழைப்பு மேற்கொண்டால் அதற்குத் தக்க ஊதியம் கிடைக்கும்.

“ஊழைவிட வலிமை மிக்கது வேறு யாதும் இல்லை” என்று பேசப்பட்டாலும் அதனையும் பெரு வெற்றிகொள்ள முடியும். சோர்வு இல்லாமல் உரிய காலத்தில் எதனையும் செய்து முடித்தால் ஊழைத் தலைகாட்டாதபடி செய்து விடமுடியும்; அதிக உழைப்பும் ஊக்கமும் செயற்பாடும் இருந்தால் விதியையும் வெல்ல முடியும்.

63. இடுக்கண் அழியாமை
(துன்பத்துக்குக் கலங்காமை)

இடுக்கண் வருங்கால் அதனைக் கண்டு சிரித்துவிடு; கலங்காதே; மனம் துவளாவிட்டால் அதுவே முதல் வெற்றியாகும்.

துன்பம் அடுக்கி வந்தாலும் உள்ளம் ஒடுக்கம் இல்லாமல் இருந்தால் அவை இருக்குமிடம் தெரியாமல் மறைந்துவிடும்.