பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
107

மாட்டார்கள். ஏன் இதனைச் செய்தோம் என்று இரங்கத்தக்க வகையில் ஒரு காரியத்தைச் செய்யாதே; தவறிச் செய்து விட்டால் அதனை மேலும் தொடராதே.

பெற்ற தாய் பசித்தாலும் அதற்காக நீ தாழ்ந்து போகாதே; அவளை வாழ்விக்கவும் தவறு செய்யாதே; பழியோடு கூடிய செயல் செல்வத்தைக் குவிக்க உதவினாலும் அது மதிக்கத்தக்கது அன்று. சான்றோர் வறுமை அவர்களுக்குப் பெருமை தரும். பிறர் அழும்படி வருத்தி ஈட்டிய செல்வம் நிலைக்காது; நல்ல வழியில் ஈட்டியவற்றை இழந்தாலும் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

வஞ்சித்துப் பொருளைச் சேர்த்து வைப்பது பச்சை மண்குடத்தில் நீர் சேமித்து வைப்பதுபோல் ஆகும்; அது நிற்காது; நாலாவழியும் கசிந்து போகும்; பொருள் நசிந்து போகும்.

67. வினைத்திட்பம்
(செயலில் உறுதி)

ஒரு செயலை ஏற்றால் அதனைச் செய்து முடிப்பது என்ற மனஉறுதி இருக்க வேண்டும்.

இடையூறு வருமுன்பே அறிந்து நீக்குக: வந்தபின் அதனைக் கண்டு தளராதே.

எதனையும் முன்கூட்டிச் சொல்லிவிடாதே; செய்து முடித்தபின் மற்றவர்கள் தாமே அறியட்டும்; இடையில் அதனை வெளிப்படுத்தினால் தடைகள் ஏற்படும்; அதனைக் கெடுத்துவிடுவர்.