பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
101


நம் நண்பர்களுக்கு நல்லது செய்து அவர்களை மேலும் வசப்படுத்த நினைப்பதைவிட, பகைவரை ஏதாவது தந்து நம் பக்கம் சேர்த்துக்கொள்வது மிக்க பயனைத் தருவது ஆகும்.

மற்றும் தம் நாட்டுக் குடிமக்கள் பகைவர்க்குத் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டால், வீண் பெருமை பாராட்டிக்கொண்டு எதிர்த்துக் கொண்டிருந்தால் பயன் இல்லை; குடிமக்கள் அழியத் தேவை இல்லை. நல்லது கருதிச் சமாதானமாகப் போவதுதான் புத்திசாலித் தனமாகும். தோல்வியைத் துணிந்து ஏற்க வேண்டும்; அதற்காக வெட்கப்படத் தேவை இல்லை.

69. தூது

அந்நிய நாட்டுக்குத் தூதுவராக அனுப்பப்படுபவர்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும்?

நாட்டுப் பற்று, நற்குடிப் பிறப்பு, அரசன் விரும்பும் நற்பண்புகள் ஆகிய இவை இருக்க வேண்டும்.

இவையேயன்றி அவனிடம் மற்றும் இந்த மூன்று சிறப்புகள் உள்ளனவா என்பதை ஆராய்க.

அரசனிடம் அன்பு, அவனுக்கு எது நல்லது என்று அறியும் அறிவு, பேச்சுத் திறமை இம் மூன்றும் சிறப்பாக இருத்தல் வேண்டும். நூற் புலமையும் அமைந்திருக்க வேண்டும்.

இயற்கையான அறிவு, காண்பவர் மதிக்கும் தோற்றம், விஷயம் அறிந்த ஞானம் இம் மூன்றும் மேலும் அவனிடம் எதிர்பார்க்கப்படுகின்றன.