பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
112


வேற்று நாட்டு அரசனிடம் பேசும்போது நம்பும் வகையில் செய்திகளில் நம்பிக்கை தோன்ற எடுத்து உரைக்க வேண்டும். அதில் உண்மை இருக்க வேண்டும்.

பேச்சில் நெகிழ்வும், வழவழப்பும், நெளிந்து பிறழும் போக்கும் இருக்கக்கூடாது; எதனையும் தெளிவாக உரைக்க வேண்டும்.

தனக்கு ஏதாவது கெடுதி உண்டாகிவிடுமோ என்று அஞ்சி வாய் தவறியும் தன் நாட்டுக்கும், அரசனுக்கும் துரோகம் உண்டாகும் நிலையில் பாதகமாகப் பேசிவிடக் கூடாது; தன் அரசனைத் தாழ்த்திப் பேசக் கூடாது. ஏந்திய கொடி அதனைத் தாழ்த்தத் தான் காரணமாக இருக்கக் கூடாது.

தன் அரசனுக்கு உறுதி பயப்பனவற்றைத் துணிந்து பேசவேண்டும். அதனால் தன் உயிருக்கு இறுதி ஏற்பட்டாலும் அதற்குக் கவலைப்படக் கூடாது. அஞ்சாமை, துணிவு, வீரம், சொல்திறம், சூழ்நிலைக் கேற்பப் பேசும் நிலை, கல்விநலம், கூர்த்த அறிவு அனைத்தும் தூதுவனிடம் இருக்க வேண்டும்.

70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
(அரசரைச் சார்ந்து நடந்து கொள்வது)

குளிர் காய்பவர் நெருப்பை விட்டு விலகக் கூடாது; அதே சமயம் நெருங்கவும் கூடாது. அது போலத்தான் அரசனைச் சார்ந்து ஒழுகும் அமைச்சர் முதலானவரும் நடந்துகொள்ள வேண்டும்.