பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
113


அரசனோடு போட்டி போட்டுக்கொண்டு அவன் விரும்பும் பொருள்களையும், பதவி பாராட்டுகளையும், இன்பச் சிறப்புகளையும் தானும் அடைய நினைக்கக் கூடாது; அடக்கமாகவே இருக்க வேண்டும்.

அரசனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். தவறாக யாராவது போய்ச் சொல்லிவிட்டால் அதனை மாற்ற முடியாது. அதனால் தான் எந்தப் பிழையும் செய்யாமல் தன்னைக் காத்துக்கொள்வதுதான் அறிவுடைமையாகும். தவறான அபிப்பிராயங்களுக்கு இடமே தரக் கூடாது. பிறகு அவற்றை மாற்றவே முடியாது.

அரச அவையில் அமர்ந்திருக்கும்போது காதோடு காது கடிப்பது போல நெருங்கி மற்றவர்களோடு ரகசியமாகப் பேசுதலைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களோடு சேர்ந்து ஆரவாரித்துச் சிரிப்பதையும் தவிர்க்க வேண்டும். மிகை நகை தகைமை அன்று.

அரசன் மற்றவர்களோடு தனித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே தலைகாட்டக் கூடாது. என்ன பேசுகிறார்கள் என்பதனை அறிய ஆவல் காட்டக் கூடாது; சந்தர்ப்பம் வரும்போது அரசனாகச் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அரசனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று பட்டால் அவன் மனக்குறிப்பு அறிந்து பேசுக; இது தக்க காலமா என்பதனையும் அறிக: வெறுப்புத் தோன்றாதபடி அதனை உணர்த்துக.

பயன்படும் செய்திகளை அரசன் கேட்காவிட்டாலும் தக்க சமயத்தில் சொல்லி வை; பயன் இல்லாதவற்றை அரசனிடம் தேவை இல்லாமல் சொல்ல வேண்டா.

8