பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
119


நூல் பல கற்றும் அவைக்கு அஞ்சுபர் அங்குச் சென்று பங்குகொள்ளத் தயங்குவர். அவர்கள் யாருக்கும் பயன்பட மாட்டார்கள். அவர்களிடம் எதிர்பார்த்து மற்றவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். கல்லாதவரே இவர்களைவிட மேலானவர் என்று கருதப்படுவர். ஏன்? அவர்கள் சொல்லாடுவது இல்லை; சோர்வு கொள்வதும் இல்லை. கல்வி கற்றுச் சிரமப்படுவதும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் ஒருசிலர் நன்றாகப் படித்துவிட்டு எதுவும் செய்யாமல் மூலையில் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்; அவையின்கண் சென்று பேச அஞ்சுகிறார்கள்; இவர்களை யாருமே சிந்திப்பது இல்லை; உயிரோடு வாழ்வார் எனினும் அவர்களை யாரும் நினைவில் நிறுத்தி மதிப்பது இல்லை. அவர்கள் வாழ்ந்தும் வாழாதவர் ஆகின்றனர். செல் அரித்துவிட்ட ஏடுகள் இவர்கள்.

74. நாடு

நாடு விளைபொருள்கள் கொண்டதாக இருக்க வேண்டும்; தகுதி வாய்ந்த குடிமக்கள் அங்கே வாழ வேண்டும்; அழிவில்லாத செல்வம் நிறைந்து இருக்க வேண்டும்.

நாட்டில் பொருள்கள் மிகுதியாக விளைவதாக இருக்க வேண்டும் வேற்று நாட்டவரும் விரும்பித் தங்கு வதற்கு ஏற்றதாக அமையவேண்டும்; கேடுகள் அற்ற நிலையில் விளைபொருள்கள் மிகுதியாக இருக்க வேண்டும்.

பிற நாட்டுக் குடிமக்கள் விரும்பித் தங்குவதற்கு ஏற்ற வசதிகளும், அவர்களும் உழைத்து உயர வாய்ப்புகளும் உடையதாக அமைய வேண்டும். எல்லா வகையிலும் வரிகள்