பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
126

என்கிறான். அவன் வீரம் போற்றப்படுகிறது. இவ்வாறு ஒருவன் படைச் செருக்கை மற்றொருவன் பாராட்டுகிறான்.

இவ்வாறே காட்டு முயலை வேட்டையாடி வெற்றி பெறுவதைவிட யானையை நோக்கி வேல் எறிவதைப் பெருமையாகக் கொள்கிறான் ஒருவன். அது குறி தவறினாலும் பரவாயில்லை என்று கருதுகிறான்; இதுவும் படைச் செருக்கு ஆகும்.

பகைவனுக்கு அருள் காட்டும் பண்பும் படைச் செருக்கு ஆகும்; இதனைப் பேராண்மை எனக் கருதினர். எதிரி ஊறுபட்டான் என்றால் அவனுக்கு உதவிசெய்தல் பெருமிதம் ஆகும். இதுவும் படைச்செருக்கு ஆகும்.

கையில் உள்ள வேலினை யானை மீது நோக்கி விட்டான்; அது பிளிறிக்கொண்டு செல்கிறது. ம்ற்றொரு யானை இவனை எதிர்நோக்கி வருகிறது. என்ன செய்வது? அவன் மார்பில் மற்றொரு வீரன் பாய்ச்சிய வேலினைத் தன் கையில் எடுத்துக்கொண்டு கொக்கரித்து ஆரவாரம் செய்கிறான்; மகிழ்ச்சியோடு அதனை விரட்ட முனைகிறான். இதுவும் படைச் செருக்கு ஆகும்.

போர் செய்து மார்பில் வீர வடுப் பெறாத நாள் எல்லாம் வாழ்ந்த நாளாக அவன் கருதுவது இல்லை; இதுவும் படைச் செருக்கு ஆகும்.

எதிரி வேல் எடுத்தாலும் அதனைக் கண்டு அஞ்சாமல் கண் இமைத்தலும் செய்யான்; இதுவும் படைச்செருக்கு ஆகும்.

உயிரை இழக்கத் துணிந்து தன் காலில் வீரக் கழலை அணிகிறான்; புகழ்தான் அவனுக்குப் பெரிது;