பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
128


நட்பு ஒப்புயர்வு அற்றது; அழைத்தால் வருவார்கள்; விழைந்தால் பழகுவார்கள். அவர்கள் உயிரையும் ஈயும் உத்தமர்கள் ஆவார்கள். அவர்கள் உனக்கு அரண்; பாதுகாப்பு வேண்டும்போது வந்து உதவுவார்கள்; வேண்டாதபோது விலகி நிற்பார்கள். பழகும்தோறும் நூல்நயம் போல் இன்பம் செய்வார்கள்.

முகம் நக நட்பது நட்பு அன்று; நெஞ்சு அகம் நக நட்பதே நட்பு ஆகும். மாலை வேளை; பொழுது போக வில்லை; கூடி நின்று கூத்து ஆடிக் களிப்பில் முழுகி அழியக் கூடுபவர்கள் அவர்கள் அழிவாளிகள்; நண்பர்கள் அல்லர். கொள்ளை அடிப்பதில் கூட்டுச் சேர்பவரும் இருப்பார்கள்; அவர்கள் கூட்டாளிகள்.

மதுஉண்டு மகிழவும், மாதர் நலம் புனையவும் கூட்டுத் தேவைப்படுகிறது. அதற்காக மட்டமான மகிழ்ச்சிக்குத் திட்டமிட்டு அமைக்கும் மகிழ்ச்சி மன்றங்களும் உள்ளன.

சீட்டு ஆடிச் சிரித்துப் பொழுதுபோக்குவர்; பொருளைப் பறித்தும் வீட்டுக்கு அனுப்புவர். இவர்கள் எல்லாம் நண்பினர் என்று கூற இயலாது. பண்பினர்தாம் நண்பினர் என்று கூறமுடியும்.

‘உயிர் காப்பான் தோழன்’ என்னும் அமுதமொழியைக் கேட்டது இல்லையா! அவன் தக்க சமயத்தில் வந்து உதவுவான்; மானம் போகும் நிலையில் நிதானம் தவறாமல் வந்து உன்னைத் தூக்கிவிடுபவன் தோழன்; இடுக்கண் வரும்போது நடுக்கம் தீர்க்க வந்து சேருவான்; கட்டி இருக்கும் வேட்டி இடுப்பைவிட்டு நெகிழ்கிறது. கைகளை வேட்டியோ, இடுப்போ அழைக்கவில்லை. உடனே இரண்டு கைகளும் தாவிச் செல்கின்றன; அதனை