பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
131

உனக்கு நன்மை என்று கருதி, நீ இல்லாத நேரங்களில் சில முடிவுகள் எடுத்திருக்கலாம்; அது தவறாக முடிந்திருக்கலாம்; “என்னைக் கேட்காமல் எப்படி இந்த முடிவு எடுத்தாய்?” என்று கேட்பது பண்பின்மையைக் காட்டும். நண்பனுக்கு அந்த உரிமை உண்டு என்று ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

நண்பன் எடுக்கும் முடிவுகளுக்கு ஒருவன் கட்டுப் படாவிட்டால் நட்புக்கே பொருள் இல்லாமல் போய் விடுகிறது. அவன் தவறு செய்துவிட்டாலும் அதற்குக் காரணம் ஒன்று அறியாமையாக இருக்க வேண்டும்; அல்லது அவன் எடுத்துக்கொண்ட உரிமையாக இருக்க வேண்டும். தீயது செய்ய வேண்டும் என்ற அடிப்படை அவனுக்கு இருந்திருக்காது.

நட்பின் எல்லையில் நின்று பழகியவர்கள், ஒருவர் ஏதாவது சிக்கலில் அகப்பட்டுக்கொண்டால் விட்டு விலகி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டார்கள். தம்மாலான எல்லா உதவிகளையும் செய்வர்.

அழிவு மிக்க செயலைச் செய்துவிட்டாலும் அன்புடன் பழகிவிட்டவர்கள் அதற்காக நண்பனைப் பகைவனாகக் கருதமாட்டார்கள். ‘தெரியாமல் நடந்துவிட்டது’ என்று எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையே நிலவ வேண்டும். “யார் செய்தால் என்ன? நானே அந்தத் தவற்றைச் செய்திருப்பேன்” என்று கூறிச் சமாதானப்படுத்திக் கொள்வதே பெருந்தன்மை ஆகும். தனக்காகத் தன் நண்பர் ஒரு நல்ல முடிவை எடுத்துச் செயலாற்றும்போது நஷ்டங்கள் ஏற்பட்டுவிட்டன என்றால் அதற்காகக் கஷ்டப்படக் கூடாது. தன் நண்பன் தன்மீது காட்டிய அக்கறையின் புனிதத் தன்மையை மதித்துப் பெருமையும் பெருமகிழ்வும் கொள்ள வேண்டும்.