பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
149

சென்றான்; எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. செலவிடுகிறான். மருத்துவனுக்கு நம்பிக்கை அற்று விட்டது. உயிர் போகும் என்று தெரிவிக்கிறான். நாடிகள் அடங்குகின்றன; உயிர்மீது பற்று; எப்படியாவது பிழைக்க விரும்புகிறான். இவன் பேசிய தத்துவங்கள் எல்லாம் வெறும் மித்தை ஆகிவிட்டன; துன்பம் மிகுகிறது; உடம்பெல்லாம் ஒரே வலி; விடுதலை பெற்றால் சுகம் தான்; அந்தத் துன்பத்திலும் துடிப்பிலும் உயிரைக் காதலிக்கிறான். எப்படியாவது வாழ விரும்புகிறான்.

சூதும் அத்தகையதுதான்; பொருளை இழக்கும் தோறும் அதனை விட முடிவதில்லை; இழந்ததை எப்படி யாவது மீட்டுவிடலாம்; ஒரே ஆட்டத்தில் சரிப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறான்; ஆட்டம் அவனைக் கை விட்டு விட்டது. ஆனால் அவன் அதனை விடமுடிவதில்லை. வாட்டம் அவனைச் சூழ்ந்துகொள்கிறது.

95. மருந்து

நோய் நாடி, நோய்க்குக் காரணம் நாடி, அது தணிக்கும் வழி நாடி, எது செய்ய வேண்டுமோ அதுதான் செய்ய வேண்டும். இது நாடி வைத்தியர் சொல்லும் வழியாகத் தெரிகிறது.

மருத்துவம் இதில் நான்கு பேர் உள்ளடக்கம் பெறுவர். (1) நோயாளி; இவர் இல்லை என்றால் மருத்துவத்துக்கே பேச்சு இல்லை, (2) அடுத்தது மருத்துவர், (3) மருந்து, (4) அதனை அருகிலிருந்து கொடுக்கும் பணிப்பெண் (அல்லது அக்கறை உள்ள சொந்தக்காரர்). இந் நால்வர் மருத்துவத்திற்குத் தேவைப்படுவர்.