பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
162


நேர்வழியில் உழைத்துக்குடியை உயர்த்துபவனை உலகம் உயர்த்திப் பாராட்டும்.

நல்ல ஆளுமை என்பது ஒருவனுக்குத் தான் பிறந்த குடியை உயர்த்தும் தன்மையை ஒட்டியது ஆகும்.

போர்க்களத்தில் வீரர்க்கே பெருமை; வீட்டுச் சூழலில் எதனையும் தன் மேலே போட்டுக்கொண்டு தயங்காமல் உழைப்பவனையே எதிர்பார்த்து நிற்பர்.

“எப்பொழுது செய்வது?” என்று காலம் கருதிக் காத்துக் கொண்டிருக்க மாட்டான். பருவம் அவனுக்குத் தேவை இல்லை; “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சோம்பிக் கிடப்பவர்க்கு எந்த நன்மையும் கிடைக்காது.

“நானா வேலை செய்வது? எனக்கு இஃது அவமானம்” என்று நடப்பது தக்கது ஆகாது; குடும்பத்துக்குத் தொடர்ந்து உழைப்பவன் துயரங்களைத் தடுக்கும் கவசம் போன்றவன் ஆவான். அடுத்துத் தாங்கும் ஆள் இல்லாத குடும்பம் துன்பம் வந்தால் சரிந்துவிடும்.

104. உழவு

எப்படிச் சுற்றி வந்தாலும் உழவுத் தொழிலைத்தான் நம்பி உலகம் வாழ வேண்டி இருக்கிறது. உழவர்கள் வண்டிக்கு இருகபோன்றவர்கள்; அவர்கள்தாம் மற்ற எல்லோரையும் தாங்குகிறார்கள்.

நிலத்தை மூலதனமாகக் கொண்டு உழுபவர் யாரையும் தொழுது வாழ வேண்டியது இல்லை. இவர்கள் பிழைப்பு மற்றவர்களை எதிர்பார்ப்பது அன்று.