பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
165


நெருப்பிலும் தூங்க முடியும்; அது வெறும் சதையைத் தான் எரிக்கும். இஃது அவன் கதையையே மாற்றிவிடும்.

வறுமை வந்த பிறகு வீடு எதற்கு? வாசல் எதற்கு? அனைத்தையும் விட்டுவிட்டுச் சந்நியாசியாகி விடுக. மற்றவர்கள் உள்ளவர்களைக் கவனித்துக் கொள்வர். அனாதை இல்லத்தில் சேர்ப்பதற்குப் பிறர் அக்கறை காட்டுவர்.

106. இரவு
(இரக்கம் தோன்றக் கேட்பது)

தேவைப்பட்டால் இரப்பதில் தவறு இல்லை, கேட்டும் மறுத்தால் தவறு மறுப்பவர்களைச் சாரும்.

இரப்பது ஒரு சுமை அன்று; அஃது ஈவானைப் பொறுத்தது; அதனால் வரும் நன்மை தவிர்க்கத்தக்கது அன்று.

இரப்பதற்காக வெட்கப்படத் தேவை இல்லை; புரப்பார் இருந்தால் இரப்பதும் ஓர் அழகே.

“இரத்தல் இழிவு; ஈதல் உயர்வு” என்று கருதத்தக்கது அன்று; இது கொடுக்கல் வாங்கல் போன்றது.

தருபவர் இருப்பதால்தான் பெறுபவரும் துணிந்து கேட்கின்றனர்; கொடைப் பண்பு இன்னும் மறையவில்லை. அதனால்தான் உலக நடைமுறை இயங்குகிறது.

ஈயும் இயல்பினரைக் கண்டால் இரப்பவரது வறுமை ஓய்வு கொள்ளும் அதனால் வரும் துன்பங்கள் மாயும்.