பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
166


இகழ்ந்து எள்ளாமல் தருபவரைக் கண்டால் இரப்பவனின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்; உள்ளுக்குள் மகிழ்வான்.

இரப்பவரே இல்லை என்றால் இந்த உலகம் மரப் பாவையைக் கொண்டதாக விளங்கும்; அவர்கள் இயக்கம் அதில் உயிர்மை இருக்காது; கயிற்றில் இழுக்கப்படுவது போல் அமைந்துவிடும்.

ஈவார் புகழ் பெறக் காரணமாக இருப்பதே ஈகையால் தான். இரப்பு இல்லை என்றால் புகழின் பரப்பே கிடையாது.

இரப்பவனுக்கு எந்தச் சூழ்நிலையிலும் சினம் வரக் கூடாது; மறுத்தால் எரிச்சல் காட்டக்கூடாது; அவனுடைய வறுமைத் துன்பம் அவனுக்கு அறிவு புகட்டும் ஆசானாக அமையும்.

107. இரவு அச்சம்

இரத்தல் தேவையை ஒட்டிதான்; என்றாலும் அதனை நியதியாகக் கொள்வது நன்மைதராது. இயன்றவரை ‘ஈக’ என்று கேளாதிருப்பது உயர்ந்த கொள்கையாகும்.

இரந்துதான் உயிர் வாழவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமானால் இந்த விதிக்குக் காரணமான படைப்பின் முதல்வன் கெடுவானாக; புரட்சி ஓங்குக.

இரந்துதான் வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டால் அதனைவிடக் கொடுமை வேறு ஒன்றும் இருக்க முடியாது. அந்த நிலைமை வரக்கூடாது.