பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
168

போராடுவான்; தீமைகளைத் தொடர்ந்து செய்பவனை ‘வில்லன்’ என்று கூறுவர். பொதுவாக அவன் மிகவும் கொடியவனாகத்தான் இருப்பான். இவர்கள் பொதுவாக முரடர்களாக இருப்பார்கள். இங்கே கயமை என்பது, ‘வில்லன்’ என்று குறிப்பிடப்படும் தீயவனை அன்று; நல்லவர்களைப் போல் தோற்றமளித்து மறைவாகத் தீமைகளைச் செய்துகொண்டு வாழ்பவரையே குறிப்பிடும்.

இந்தக் கயவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாது; இவர்கள் எப்படியாவது தாம் வாழ்ந்தால் போதும் என்று மற்றவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டுத் தாம் தப்பித்துக்கொள்வார்கள். நடிப்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

இவர்கள் மிகப் பெரிய மனிதர்கள்; தேவர்களைப் போன்றவர்கள்; தேவர்கள் தாம் கருதியதை எப்படியும் அடைந்தே தீர்வார்கள்; இன்பம்தான் அவர்களுக்குக் குறிக்கோள். விருப்பப்படி நடந்துகொண்டு எதனையும் சாதிப்பதில் இவர்கள் தேவர்களைப் போன்றவர்.

மனச்சான்று என்பது இவர்கள் வளர்த்துக்கொள்வது இல்லை; பிறர்க்குத் தீமை செய்யும்போது அதற்காக வருத்தப்படவே மாட்டார்கள். மனத்தில் எந்தக் கவலையும் கொள்ள மாட்டார்கள்; பிறரைக் கெடுப்பதே தான் முன்னேறும் வழி எனக் கண்டவர்கள்.

கயவர்கள் தம்மைவிட அதிகாரம் மிக்கவர்களைக் கண்டால் தாழ்ந்து போவார்கள்; அவர்கள் இடும் கட்டளை களை மறுக்கமாட்டார்கள்; தம்மினும் மிகவும் தாழ்ந்தவர்களைக் கண்டால் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்; மருட்டுவார்கள்; கடிந்து பேசுவார்கள்; வாட்டுவார்கள்.