பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
176


“நூல்களைக் கற்கும் தோறும் புதிய செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். புதிய சுவையும் தந்துகொண்டே இருக்கும். காமமும் அறியும்தோறும் புதுமை தருகிறது; அறிவதற்கு நிறைய உள்ளது என்று விருப்புத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. விழைவும் வேட்கையும் காதலுக்கு நுழை வாயில்கள்.”

112. நலம் புனைந்து உரைத்தல்
(காதல் வெறி தலைக்கேறுகிறது; தலைவன் கவிஞன் ஆகிவிடுகிறான். கற்பனை நயம் அமைய அவன் உரையாடல்கள் இயங்குகின்றன.)


“அனிச்ச மலர் மற்றைய எல்லாப் பூக்களையும் விட மெல்லிது என்று சொல்லி வந்தார்கள். அதனை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தேன்; என் தலைவியின் மேனி அதனைத் தொட்டேன்! துவண்டாள்; இவள் மேனி அனிச்ச மலரைவிட மெல்லிது என்று உணர்கிறேன்.”

“புதுப் பூ ஒன்று பூத்திருந்தது; அதனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறேன். அஃது என் தலைவியின் பொலிவைப் பெற்றிருக்கிறதா? என்று ஆராய்வேன். இப்பொழுது பூஞ்சோலைக்குப் போவது புதுப் பழக்கம் ஆகிவிட்டது. வாழ்க்கையை நேசிக்கிறேன்; பூக்கள் என்னைக் கவர்கின்றன. பூவையின் அழகை அவை காட்டுகின்றன.”

“மாந்தளிர் போன்றது அவள் கரிய நிறத்து மேனி; முறுவல் வெண்முத்து; அவள் மேனியில் தோன்றும் மணம் பூக்களை நினைவுபடுத்துகின்றன. விழி வேல்; தோள் மூங்கில்."