பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
186


“பசலை காதலர் தந்தது; அதனால் அது தன் விருப்பப்படி பரவுகிறது; அதனைத் தடுத்து நிறுத்த என்னால் இயலவில்லை.”

“என் சாயலையும், நாணத்தையும் அவர் கைக் கொண்டார்; அதற்கு மாறாகத் துன்பத்தையும்; பசலை யையும் எனக்குத் தந்துவிட்டார்.”

“எப்பொழுதும் அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்; நான் கவனிக்கவே இல்லை; கள்ளத்தனமாக இப்பசப்பு என்னை வந்து அடைந்துவிட்டது.”

“இருக்கும்போது சற்று அசைந்தால் இந்தப் பசலை ஒட்டிக்கொள்ளும்; அவர் பிரிந்து விட்டார்; இனிச் சொல்லவா வேண்டும்?”

“விளக்கு ஒளி மங்கும்போது இருள் வந்து புகுந்து விடுகிறது; காதலர் விலகும்போது இலகுவாகப் பசலை வந்து இடம்பிடித்துக் கொள்கிறது.”

“அவர் தழுவ, அவரைவிட்டு நான் சிறிது நழுவினேன். அவ்வளவுதான், என் மேனி பொன்னிறம் பெற்றுவிட்டது; பசலை செய்த சதி அது.”

‘பசந்தாள் என்று என்னைப்பற்றிப் பழி கூறுவர்; அதற்குக் காரணம் யார்? அவர் கசந்தார் என்பதை யாருமே கூறுவது இல்லை.”

“கடமை கருதிக் காதலர் சென்றிருக்கிறார்: அது தவிர்க்க இயலாதது என்றால் பசலை வருவதும் தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.”