பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
189


“கூடிய காலத்துக் கிடைத்த இன்ப அலைகளை நாடி அதில் மயங்கிக் கிடக்கிறேன். இதுவும் ஓர் இன்பம்தான்.”

“பழைய நினைவுகள் என்னை வாழ்விக்கின்றன; பிரிவுத்துயர் என்னைத் தாழ்விக்கிறது.”

“அவரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் அஃது எனக்குத் தகுதி என்று அனுமதிக்கிறார்; காதல் வாழ்க என்று வாழ்த்துகிறார்.”

“நீ வேறு நான் வேறு அல்ல’ என்று கூறியவர் தனித்து என்னைவிட்டுப் பிரிந்திருப்பது துயர் விளைவிக்கிறது.”

“நிலவே! நீ மறையாதே; என் காதலரை என் கண்கள் காண விழைகின்றன.”

122. கனவுநிலை உரைத்தல்

தலைவி கூற்று

“காதலர் அனுப்பிய தூதாக வந்த கனவினுக்கு எவ்வாறு விருந்து அமைப்பேன் திகைக்கிறேன்.”

“கண்கள் உறக்கம் கொண்டில; அவை சற்று மூடினால் கனவில் என் காதலரைக் காண்பேன்; என் பிரிவுத்துயரை எடுத்து உரைப்பேன்.”

“நனவில் எனக்கு அருள் செய்திலர்; கனவில் அவரைக் கண்டு மகிழ்வேன்; உயிர் வாழ்வேன்."