பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
190


“நனவு தாராத புதிய சந்திப்புகளைக் கனவு தருகிறது; கனவே நீ வாழ்க.”

“நனவில் அடைந்த இன்பம் அப்பொழுது அஃது உண்மையாக இருந்தது; கனவிலும் காண்பதும் உண்மை; இரண்டுக்கும் வேறுபாடே இல்லை.”

“நனவு ஒன்று தேவையே இல்லை; காதலரைக் கனவிலேயே கண்டு கொண்டிருக்க முடியும்.”

“நனவில் பிரிந்து வருத்தும் தலைவர், கனவில் வந்து ஏன் கூடி நெஞ்சை அலைவுறுத்துகிறார்?.”

“துயிலும்போது என் தோள்மேல் இருப்பார்; விழிக்கும்போது என் நெஞ்சில் ஏன் ஒளித்துக் கொள்கிறார்?”

“கனவுகளில் தம் காதலரைச் சந்திக்காத பெண்களே, தம் காதலர் கொடியவர் என்று பழி தூற்றுவர்; அன்பில்லாதவர் என்றும் அறைகுவர்.”

‘கனவில் அவர் வந்து போவதை அறியாதவர் காதலர் என்னைப் பிரிந்துவிட்டார் என்று பிழைபடப் பேசுவர்.”


123. பொழுதுகண்டு இரங்கல்

தலைவி கூற்று

“மாலைப்பொழுது கொடிது; பிரிந்தவர் உயிர் உண்கிறது; ஊழிக்கால இறுதி போன்றது அது."