பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
202


“உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே; அளவோடு சேர்த்தால் உணவு சுவைக்கும். அதனை மிகுதியாகச் சேர்க்கக் கூடாது. ஊடலும் நீட்டிக்கவிடக் கூடாது.”

“ஏற்கெனவே நொந்து இருக்கும் நிலையில் ஊடலைத் தொடங்கிவிட்டுப் பின் கூடாமல் போனால் அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாது; ஊடல் தொடக்கம்; கூடல் முடிவு.”

“ஊடிய மகளிரை ஊடிவிட்டுக் கூடாது இருத்தல் வாடிய வள்ளிக்கொடிக்கு நீர் ஊற்றாதது மட்டும் அன்று; அதனை அடியோடு பிடுங்கி எறிவதற்கு ஒப்பும் ஆகும்.”

“ஆடவர்க்கு அழகு மகளிர் நெஞ்சில் ஊடலைத் தோற்றுவிப்பது.”

“ஊடல் தொடக்கம்; அது மிகுந்தால் ‘துணி’ எனப்படும். இவை இரண்டும் இல்லை என்றால் காமம் சுவையற்றதாகிவிடும; பழம் மிகவும் கனிந்து விட்டாலும் புளிக்கும்; செங்காயாக இருந்தாலும் துவர்க்கும். அளவாகக் கனிந்தது சுவைக்கும். எல்லை கடவாமல் ஊடலை நீட்டிப்பது சுவைதருவது ஆகும். ஊடலே இல்லை என்றாலும் பயன் இல்லை.”

“ஊடல் இன்பம் தருவதுதான்; என்றாலும் அதனை நீட்டித்து விட்டால் கூடலுக்கு வாய்ப்பு இருக்குமோ இருக்காதோ என்ற கவலையையும் அது தருகிறது; அதனால் அது துன்பம் தருவதாகவும் அமைகிறது.”

“தலைவியின் மனம் நோகக்கூடும் என்று நினைத்துப் பார்க்கும் நுட்ப உணர்வு இல்லாதவரிடத்து ஊடல் கொள்வதால் பயனே இல்லை; நுட்ப உணர்வினரே அதன் அழகை அறிய முடியும்.”