பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14

நேசிக்கும் நாட்டு மக்களையும், மக்கள் தலைவனையும் காப்பாற்றுவதற்கே வீரன் ஒருவன் போர்மேற் செல்கிறான். இதற்கு அடிப்படை யாது? நாட்டின்மீது உள்ள அன்பு: மக்கள்மீது காட்டும் நேயம். எனவே உலகத்து நன்மைகளுக்கு எல்லாம் தூண்டுகோலாக உள்ளது அன்புதான்; அதனால்தான் அன்பே கடவுள் என்றும் அறிவிப்பர்.

அறம் உயிர்களை வாழ வைக்கும்; அன்பு உடையவர்களுக்கு அஃது ஆற்றலைத் தரும்; உயர்ந்த செயல்களைச் செய்யத் தூண்டும். அன்பு அற்றவரை அறக்கடவுள் காயும்; அவர்களை அழிக்கும்; அவர்களைத் தழைக்கவிடாது. புழுவுக்கு எலும்பு இல்லை; வெய்யில் அதனைச் சுட்டுப் பொசுக்கிவிடுகிறது. அதுபோலத்தான் அன்பு அற்ற மானிடச் சடங்களை அறம் காயும்; அவர்கள் வாழ்வு சாயும்.

உள்ளத்தில் அன்பு இல்லை என்றால் அவர்கள் பள்ளத்தில் விழ வேண்டியதுதான். அன்பு அகத்து இல்லாத உயிர்வாழ்க்கை தளிர்க்கவே தளிர்க்காது; கொடிய பாலை நிலம் அங்கே மழையைக் காணாமையால் மரம் வற்றி விடும்; பட்டுப் போன அந்த மரம் மறுபடியும் துளிர்விடும் என்று கூறவே முடியாது. நீர் இல்லாத மரம் தளிர்க்காது; அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அந்த வாழ்க்கை தலை எடுக்காது. அவனை உயிருள்ள மனிதன் என்றே கூறமுடியாது.

அவனாயினும் சரி, அவளாயினும் சரி, தோற்றம் அழகு உடையது; என்றாலும் அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அவர்களுக்கு ஏற்றம் இல்லை; புறத்துறுப்பு வடிவு தரும்; அகத்துறுப்பே இயக்கம் தரும். பொம்மை அழகாகத்தான் இருக்கிறது என்றாலும் அதனை உயிர் உள்ள மனிதன் என்று கூறார்; அதனை அவன் என்றோ,