பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16

அழைப்பு இன்றியே உறவுகொண்டு அங்கேயே தங்கி விடுவாள்; அவள் களிநடம் புரிந்து அந்த வீட்டைப் பொலிவு பெறச் செய்வாள்.

பூமகள் புகுந்துவிட்ட வீட்டில் அவ் வீட்டுக்கு உரியவனுக்கு என்ன குறை? அவன் செல்வம் கொழிக்க வீட்டில் அவன் பிழைக்க வழிதேட வேண்டியது இல்லை; உழைக்க அவன் நிலம் தேடிச் செல்ல வேண்டியது இல்லை; வந்தவருக்கு உண்ணத் தந்துவிட்டு மிச்சத்தை மிசைவான். அவன் நிலபுலத்தை அவனே சென்று கவனிக்க வேண்டும் என்பது இல்லை; தொட்ட இடம் எல்லாம் பொன் துலங்கும்; மற்றவர்கள் அவனுக்காக உழைக்க முன் வருவார்கள்.

அந்திக் காலத்தில் அவனைச் சந்திக்க வானவரும் வருவர்; அருவிருந்தாக வரவேற்றுச் சிறப்புச் செய்வர்; அவன் வாழ்க்கை வடுவந்து பாழ்படுவது இல்லை.

வருகின்ற விருந்தினரை மிக்க வகையில் உபசரிக்க வேண்டும் என்பதைவிடத் தக்க வகையில் கவனிக்க வேண்டும். தேவை அறிந்து அவர்களுக்கு உணவும் உறையுளும் தந்து களைப்பைப் போக்கி மனம் மகிழ வைக்க வேண்டும். நீ எவ்வளவு செய்கிறாய் என்பதைவிட யாருக்குச் செய்கிறாய் என்பது அடிப்படை தகுதி அறிந்து உபசரித்தால் மிகுதியான நன்மைகள் வரும்.

விருந்து அவர்களுக்கு இட்டு அருந்துக; அது தனி இன்பம்; அந்த வாய்ப்பு அனைவர்க்கும் வாய்க்கும் என்று கூற இயலாது. இல்வாழ்க்கை நடத்தும் நல்வாழ்க்கை உடையவனால் அஃது இயலும்; இந்த இணையற்ற வாய்ப்பும், அதனால் அமையும் உயர்வும் அடைய முடியாதவரே வாழ்க்கையைவிட்டு ஓடுவர்; விரக்திகொண்டு