பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

விடுதலை பெற நாடுவர்; இல்வாழ்வில் இந்த நல்வாய்ப்பு இருக்கிறது என்பதனை அறிய முடியாதவரே காவி உடை ஏந்திக் கமண்டலத்தைக் கைபிடிப்பர்.

விருந்தினரை ஒம்புவது ஏழைகளால் இயலாது; வறியவருக்கு முடியாது; செல்வர்களே செய்ய முடியும். செல்வத்தின் பயன் இதுதான். பணம் படைத்தும் விருந்தினரைப் போற்றும் குணம் படைக்காவிட்டால் அவர்கள் வாழ்க்கை மணக்காது. செல்வர்கள்தாம்; ஆனால் விருந்தினரை ஓம்ப மனம் இல்லாததால் அவர்கள் ஏழைகளே; மடமை மிக்கவர்கள் என்றுதான் கூற முடியும்.

விருந்தினரை உபசரிப்பது நுட்பமான கலை. அதன் விலை இன்முகம். தூரத்தில் இருந்தே நம் அன்பின் ஈரத்தை அவர்களால் உணர முடியும். அனிச்சப்பூ முகர்ந்தால் தான் குழையும்; விருந்தினர் முகம் திரிந்து நோக்கினாலேயே மனம் மாறுபடுவர். நீ எவ்வளவு செய்தாய் என்று பேசமாட்டார்கள்; நீ எப்படி நடந்துகொண்டாய் என்பதைப் பற்றித்தான் கூறி ஏசுவார்கள்.

10. இனியவை கூறல்

சொற்களில் கருத்து இருக்கட்டும்; அன்பு கலந்து பேசுக; உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் கரவு, உறவைக் கெடுக்கும்; கடுமை தவிர்த்துக் காதுக்கு இனிமை சேர்க்கவும்.

கொடைவள்ளல் என்று பிறர் தடையின்றிப் பேசுவர்; உள்ளம் உவந்து ஈவதைவிடக் கள்ளம் தவிர்த்து முகம் மலர்ந்து இனிய சொல் பேசுக; அதையே அவர்கள் எதிர்