பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20


நண்பர்கள் என்று எடுத்துக்கொண்ட பிறகு அவர்கள் ஏதோ சில சமயம் தீமையும் செய்துவிடலாம். அவர்கள் செய்த நன்மையை நினைத்துப் பார்; தீமை தீயின்முன் வைக்கும் தூசாக மாறிவிடும். தீமையை மறந்துவிடுவது தக்கது; நன்மையை மறக்காதே.

கொலைக்கு நிகரான கொடுமையைச் செய்திருக்கலாம்; அவன் உனக்கு நண்பன்; அவன் ஒரு சமயம் உன் உயிரையும் காப்பாற்றி இருக்கலாம். கடுமையான சோதனைகளில் கைகொடுத்து உதவி இருக்கலாம். அடுக்கிய நன்மைகள் உனக்கு அவன் செய்திருப்பான்; அவற்றுள் ஒன்றினை நினைத்துப்பார். விளக்கின் முன் இருள்போல் அவன் செய்த தீமைகள் மறைந்துவிடும். அவன் செய்திருக்கும் நல்லவற்றுள் ஒன்றை நினைத்துப் பார். அவன் செய்த தீமைகள் உன் நினைவுவிட்டு நீங்கிவிடும்

அறம் என்று குறிக்கப்படுவன பல உள்ளன; அவற்றுள் நன்றி மறவாது இருத்தல் ஒன்று ஆகும். அறம் பிற நீ துறந்து விட்டாலும், கைவிட்டாலும் நீ மன்னிக்கப்படுவாய்; அறம் உன்னைச் சீறாது. நன்றி மறந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. தகாத பல செய்தாலும் தாங்கிக்கொள்ள முடியும்; செய்த நன்மையை மறந்து கேடு செய்தால் அவனைப் போன்ற பாதகன் இருக்க முடியாது. அவனுக்கு விமோசனமே கிடைக்காது.

12. நடுவுநிலைமை

முறை கெடாமல் எதனையும் ஏற்றுச் செய்ய வேண்டும்; நிறைகெட்டால் பொருள் கிட்டும் என்பதற்காக நடு நிலைமை பிறழ்ந்தால் அவன் கெடுவது உறுதி ஆகும்.