பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27

மாட்டான். கீழ்நிலையில் வாழும் ஒருவன் பேசும்மொழி, சேற்று நிலத்துச் சொற்களாக அமைவது உண்டு. வேற்று ஆள் ஒருவன் அதனைக் கண்டாலும் இவ்வாறு பேசக் கூடாது என்று சுட்டிக் காட்டமாட்டான். மேன்மக்கள் தவறியும் தாழ்சொற்களை உதிர்க்கமாட்டார்கள். வாய்தவறி அச்சொற்களில் கறை ஏற்பட்டால் அந்தக் குறை வெள்ளைச் சட்டையில் பட்ட கறுப்பு மையாக வெளிக்காட்டி விடும். அதனால் அவர்கள் விழிப்போடு இருப்ப்ார்கள்: வார்த்தை வழுச் செய்யமாட்டார்கள்.

கோபுரக் கலசம் அது கீழே இறங்குவதில்லை. அஃது ஒளிவிட்டுக் கொண்டே இருக்கிறது. குப்பைக் கோழி புழுப்பூச்சியைத் தின்றுகொண்டு தரையில் மேயும். ஒழுக்கத்தில் உயர்ந்தவன் மேலோன்; ஒழுக்கம் தாழ்ந்தோன் கீழோன் ஆகிறான்.

ஒழுக்கம் என்பது நன்னடத்தையும் ஆகும். உயர்ந்தோர் காட்டிய வழியில் நடப்பது உயர்வுதரும். நூல் பல கற்ற வராயினும் உலக நடை அறிந்து ஒழுகுவது அவசிமாகும். உலகநடை என்பது உயர்ந்தோர் சுட்டிக்காட்டும் நன்னெறிகளே.

15. பிறனில் விழையாமை

அறநூல் அறிந்தவர்கள் பிறன் மனைவியை நயத்தலை ஒழித்து ஒதுக்குவர். ஒருவன் எந்தத் தவறு செய்தாலும் அவனை மன்னிக்க முற்படுவார்கள்; பிறன் ஒருவன் வாசற்கடையில் நின்று ஏசப்படும் நிலையில் நடந்து கொள்வானானால் அவனை மன்னிக்கமாட்டார்கள். நல் உணர்வு அற்றவனைச் செத்தவனாகவே மதிப்பர்.