பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29


இம் மூன்றுமே அல்லாமல் பழி என்பது உச்சகட்டமாக அமையும்; அக்குடும்பத்தின் இன்ப வாழ்வை அன்பு உறவைச் சிதைத்தான் என்ற பழி என்றும் நிலைத்து நிற்கும்.

பிறர்க்கு ஏற்படும் பாதிப்புகள் இருக்க அவனுக்கே ஏற்படும் பரிதவிப்பும் உள்ளது. பேராண்மை என்பது பிறன் மனைவியை விரும்பாத நல்லொழுக்கம்; ஒருத்தியோடு வாழ்ந்து இல்வாழ்க்கையைச் சிறப்பித்து மனநிறைவோடு வாழ்ந்தால் அவனுக்கு அது வெற்றியாகும். வாய்ப்புகள் வரலாம்; அந்தத் தளைகளுள் அகப்படாமல் இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு; அவன் மனைவியும் அவனை மதிப்பாள். அன்பு வளரும்; அறம் அவனை வாழ்த்தும்.

தன்னால் சில பழக்கங்களை விடமுடியாது என்று பிதற்றுபவரும் உளர். குடிப்பது தமக்குப் பழக்கம் அதனை விடமுடியவில்லை என்பார்கள். திருடுவது தேவை என்று ஒருசிலர் அநியாயத்தை நிறுவி நியாயம் பேசுவார்கள், முரடன், வீணன், கொடியவன், கீழ்மையன், கயவன் என்று பெயரெடுத்தாலும் அவன் தீய செயல்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். அற்பத்தனமாகப் பிறன் மனைவியை விரும்புதல் ஆகிய இக்கீழ்மையை மேற்கொள்பவனை யாரும் மதிக்கமாட்டார்கள். அவனுக்கே தற்காப்பு, இந்த ஒரு குற்றம் மட்டும் செய்யாதிருப்பது.

16. பொறை உடைமை

கையிலே கடப்பாரை; பக்கத்திலே மண்வெட்டி: நிலத்தைக் குழிப்படுத்துகிறான். அவனை அந்தக் குழியிலேயே போட்டு மிதிக்க நினைக்கலாம்; நிலம் என்னும் தங்கை வெட்டினாலும் தட்டிக் கேட்பது இல்லை;