பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34


பிறர் பொருளைத் தவறான வழியில் பெற்றுச் சேர்த்து வைக்கும் பொருள் நிலைக்காது; கைக்கெட்டுவது வாய்க்கு எட்டாமற் போய்விடும்.

பிறரிடம் கையேந்திப் பொருள் சேர்த்தால் தம்மிடம் உள்ள பொருளும் கைவிட்டுப் போகும்; அவரவர் தத்தம் உழைப்பால் உயர்வது உறுதி தரும்.

பிறரை வஞ்சிக்காதவன்; அவனைத் திருமகள் தேடி வருவாள்; நாடியதை அவள் தந்து அவனை உயர்த்துவது உறுதி.

சிந்தனை அற்று நிந்தனை தரும் செயலாகிய பிறர் பொருளை விரும்புவது அழிவைத் தரும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறன் பொருள் வேண்டா என்ற உறுதியான கொள்கை உடையவனாக இருந்தால் அதுவே வாழ்க்கையில் வெற்றிதரும்; பெருமிதத்தோடு வாழ முடியும்.

19. புறங்கூறாமை

பிற அறங்களைக் கைவிடட்டும்; அறம் அல்லவையும் செய்யட்டும்; பிறனைப்பற்றி அவன் இல்லாதபோது அவனைப் பற்றிக் குறைகூறாமல் இருக்கட்டும்; அது போதும்.

அறத்தை அழித்துத் தீயவை செய்வதைவிட நேரில் பழகும்போது சிரித்துப் பேசிவிட்டு இல்லாத போது பழித்துக் கூறுதல் மிகவும் தீயது ஆகும். அவனைப்பற்றிக் குறைகூறாமல் இருக்கட்டும்; அது போதும். நட்புக்கே பொருள் இல்லாமல் போய்விடுகிறது.