பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
36



குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை; பிறர் குற்றத்தை ஆராய்வதுபோல அவரவர் தம் குறைகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும்; குறையற்றவர் யாருமே இந்த மண்ணில் பிறக்க முடியாது என்பதை உணர்வர்.

20. பயனில சொல்லாமை

படித்தவர் கூடும் சபையில் பயனற்ற சொற்களைப் பேசாதே; அவர்கள் வெறுப்பார்கள்; புத்தி கெட்டவன் என்று இகழ்ந்தும் பேசுவர்.

நண்பர்களிடத்தே தகாத முறையில் நடந்துகொள்வது தவறு; அதனை அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்; பல பேர் முன்னால் பயனற்ற சொற்களைப் பேசினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

வெற்றுப்பேச்சுப் பேசி வீண்பொழுது போக்குபவரை வெற்று வேட்டு என்று கடிந்து கூறுவர்.

பலபேர் கூடி இருக்கும் இடத்தில் கண்டபடி கருத்து இல்லாமல் பேசினால் அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்; தீமைகளே விளையும். கழுத்தைப் பிடித்துத் தள்ளுவர்.

அறிவு மிக்கவன் என்று சொல்லிக்கொண்டு செறிவு நீங்கிய சொற்களைப் பேசினால் அவனைப்பற்றிய மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும். அவன் சராசரி என்று எடை போடுவார்கள்.

பயனற்ற சொற்களைப் பேசுபவனைக் கற்றவன் என்று கூறார்; வெறும் பதர் என்று கூறுவர்; உள்ளீடு அற்றவன் என்று இகழ்வர்.