பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
39


உபகாரம் செய்யும் இந்த வாய்ப்புத் தேவர் உலகத்திலும் வாய்க்காது.

பிறர்க்கு எது தேவையோ அதனை அறிந்து தக்க சமயத்தில் உதவுவது உபகாரியின் செயல்; அவனைய்யே உயிர் வாழ்பவன் என்று கருதுவர்; மற்றவர் வாழ்ந்தும் செத்தவராகவே மதிக்கப்படுவர்.

அவர்கள் செல்வம் பலருக்கும் தேவைக்கு ஏற்பப் பயன்படுவதால் ஊர்ப் பொதுக்கிணறு போன்றது என்று கூறலாம்; ஊர் நடுவில் பழுத்த மரம் என்றும் கூறலாம்; பலருக்கும் பயன்படும் மருந்துச்செடி என்றும் கூறலாம்.

ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் கோடைக் காலத்திலும் ஊற்றுப் பெருக்கால் அஃது உலகு ஊட்டும். உபகாரிகள் தம்மிடம் பொருள் இல்லாவிட்டாலும் தம்மால் இயன்ற அளவு எப்படியாவது உதவுவார்கள்.

உபகாரி ஏழையாகிவிடலாம்; வறுமை உற்றபோதும் அவர்கள் நெஞ்சு வற்றிவிடுவது இல்லை. உபகாரம் செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருந்துகொண்டே இருக்கும்: செய்ய இயலவில்லையே என்று வருந்துவர்.

உபகாரம் செய்வதால் தனக்குக் கேடுவரும் என்றாலும் அவன் தயங்குவது இல்லை; தன்னை விற்றாவது அவன் உபகாரம் செய்துகொண்டே இருப்பான்; அவ்வாறு துணிவது தக்க செயலாகும்.

23. ஈகை

ஒப்புரவு என்பது ஒத்த நிலையில் இருப்பவர்க்கு உதவுவது; ஈகை என்பது வறியவர்க்குத் தருவது ஆகும்.