பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40

செல்வர்க்குத் தருவது அவரிடமிருந்து நன்மைகளை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.

பிறரிடமிருந்து பொருள் பெறுதல் அறநெறிச் செயல்களுக்கே என்றாலும் ஏற்பது இகழ்ச்சியே; கொடுத்தால் மேல் உலகம் வாய்க்காது என்று மருட்டினாலும் அதனைப் பொருட்படுத்தாமல் வறியவர்க்குக் கொடுப்பதே நன்மையாகும்.

‘இல்லை’ என்று கூறும் சொல் ஈயும் குடிப்பிறந்த வனிடத்துத் தோன்றாது. தரப் பொருள் இல்லை என்று கூற அவன் நா இடம் தாராது; எப்படியும் கொடுத்து உதவுவான்.

பிறர் பசி தீர்க்கும் வள்ளன்மை உடையவன் தவசியை விட மேலானவன் ஆவான்; தவசி தன் பசியை மட்டும் தாங்கிக்கொள்கிறான். பசியை அவனால் அடக்க முடிகிறது: இவர்கள் பிறர் பசியை அடக்கித் தீர்த்தும்விடுகிறார்கள்.

பொருள் பெற்றவன் வறியவரின் கடும்பசியைப் போக்க வேண்டும். அப்பொழுதே அப் பொருளுக்கும் பெருமை உண்டாகும்.

பிறர் பசி போக்குவதற்குத் தம் கைப்பொருளைப் பங்கிட்டுத் தரும் கொடையாளி வறுமையால் வாடுவான் என்று கூற முடியாது; அத்தகைய நல்லோன் என்றும் எதற்கும் துன்பப்பட மாட்டான்; அவன் செல்வம் பெருகுமேயன்றிக் குறையாது.

பிறருக்குத் தந்து அவர் துயர் தீர்க்கும் போது உண்டாகும் மகிழ்ச்சியை ஈயாதவர் அறியமாட்டார்கள். அவர்கள் தேடி வைத்த பொருளைத் தீயவர்கள் அனுபவிப்பர். அவர்கள் நல்லதுக்குத் தரமாட்டார்கள்.