பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49

உள்ள அவனிடம் அருள்வேட்கை இடம் பெறாது. அவர்கள் பிறரிடம் அன்பு காட்டமாட்டார்கள்.

பிறர் பொருளை நம்பி அதனைக் கவருவதே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள், அத் தீமையிலும் அளவோடு நிற்கமாட்டார்கள். அதே போல அவர்கள் அளவறிந்தும் வாழ்க்கை நடத்தமாட்டார்கள்; தாறுமாறாகச் செலவுசெய்து அவர்கள் விரைவில் சீரழிவார்கள்.

போதும் என்ற மனத்தோடு வாழ்பவர் நெஞ்சில் அறம் நிற்கும். களவு வாழ்க்கை உடைய இவர்கள் நெஞ்சில் வஞ்சகமே தலைதூக்கி நிற்கும்.

களவு தவிர வேறு செயல் அறியாத இவ் வஞ்சகர் தீய செயல்கள் பலவற்றைச் செய்து அவற்றால் விரைவில் அழிந்துவிடுவர்.

நேர்வழியில் வாழ்பவர் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து இறுதியில் பலரும் போற்றும் நல்வாழ்வை அடைவர்; கள்ள மனமுடையவர்கள் நோய்நொடிகளுக்கு இரையாகி விரைவில் மரணத்தையும் சந்திப்பர்.

30. வாய்மை

வாய்மை என்பது தீமை விளைவிக்காத சொற்களைப் பேசுவது என்பதாகும். பொய்யே துணிந்து பேசலாம்; ஆனால் அது நன்மை விளைவிப்பதாக அமையவேண்டும். குற்றம் தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் பொய்ம்மையும் வாய்மையாகும். நெஞ்சாரப் பொய் சொன்னால் அவன் நெஞ்சே அவனைச் சாடும்; மனச்சான்று அவனைக் கண்டிக்கும்.