பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
55


‘பகுத்து உண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை’ என்ற சிந்தனை, கொலையைத் தவிர்ப்பதற்குக் கூறப்படும் அறிவுரையாகும்.

உள்நாட்டு அறப்போராட்டங்களும், வெளிநாட்டுப் போர்களும் தவிர்க்க முடியாதவை என்று கருதப்படலாம்; அகிம்சையும் சத்தியமும் இவற்றைத் தீர்க்கவும் மாற்றவும் தக்க வழிகள் எனக் கொள்வது தக்கதாகும். வன்முறை தவிர்க்க அறப்போர் மேற்கொள்வது தக்கது ஆகும்.

மற்றும் வேறு பல காரணங்களால் கொலை நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. நிலத்தகராறு, பாகப் பிரிவினைகள், இல்லறச் சச்சரவுகள் இவற்றைத் தீர்க்கத் துரிதவழி, நல்ல வழி கொலைதான் என்று ஒருசிலர் அவசரப்பட்டுச் செயல்பட்டு விடுகிறார்கள். எனினும் கொல்லாமை என்பதுதான் அறிவுடைமையாகும்.

கொன்றுதான் ஆகவேண்டும் வேறுவழி இல்லை என்ற நிலை ஏற்படுமானால், மென்மையான மனம் படைத்தவர்கள் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் துறவு கொள்கின்றனர்; பலர் துறவு கொள்வதற்குக் காரணம் இக்கொலைகள், கொடுமைகள், அலைவுறுத்தல் முதலிய தீமைகளினின்று விடுபடவே எனக் கூறலாம்.

தன்னுயிர் போகும் எதிரியைக் கொல்லாவிட்டால் என்னும் சூழ்நிலை ஏற்படுகிறது. மாற்றானைக் கொல்வதை விடத் தன்னுயிரை ஈவது பேரறமாகும். துணிந்து தன்னைக் கொலை செய்ய வருபவன் முன் நின்றால் அவன் மனம் மாறுபடக் காரணம் ஆகும்; மனம் மாறாமல் கொன்று விட்டால் தியாகச் சுடராக விளங்கலாம்; அவனை உலகம் போற்றும்; அமரனாகும் நிலை ஏற்படும். தியாகிகள் இப்படித்தான் உருவாகிறார்கள்.