பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56


கொன்றால்தான் தீர்வு ஏற்படும்; வேறு வழியில்லை என்றாலும் கொலை என்ற முடிவுக்கு வருவது மிகவும் கொடுமையாகும்; உயிரை மதிக்காமை ஆகும். உயிரை உடம்போடு சேர்த்தது படைப்பின் செயல்; அதைப் பிரிக்க மானுடர்க்கு உரிமை கிடையாது. மற்றும் கொலைக்குற்றம், அதிலிருந்து தப்பவும் முடியாது. அவரவர் மனம் அவர்களை அரித்துக்கொண்டே இருக்கும். கொலையாளி, அவன் கொடுமைகளின் இருப்பிடமாகத்தான் இருக்க முடியும்; நிச்சயம் அவன் செய்யும் பாவத்தை அவன் அனுபவித்துத் தான் தீர்வான்; வறுமை, நோய் முதலியன அவனை வாட்டாமல் போகா; வாழ்வு அவனை ஒதுக்கிவிடும்.

34. நிலையாமை

நேற்று நன்றாகப் பேசிக்கொண்டிருந்தான்; இன்று அவனைத் தூக்கிச் செல்கிறார்கள்; சாவு வெற்றி முழக்கம் செய்கிறது. யார் எப்பொழுது சாவார்கள் என்று கூற முடியாது; அதே போலத்தான் செல்வமும். கண்முன் பார்க்கும் போதே ஈட்டி வைத்த செல்வம் இவனுக்குக் கைகாட்டி விடுதலை பெற்றுக்கொண்டு அவனைவிட்டு நீங்குகிறது. அவனாக அழித்தாலும் ஆச்சு; மற்றவர்கள் ஏமாற்றிச் சுழித்தாலும் போச்சு.

மனிதன் தான் நிலைத்து நீண்டகாலம் வாழப் போகிறோம்; நம்மிடம் செல்வம் நிலைத்து இருக்கும்; நாம் அனுபவித்து மகிழ்ச்சியோடு இருக்கலாம் என்று நினைப்பான். அஃது இயலாது; நிலையாமை என்ற கோட்பாடு நம் வாழ்வில் ஊடுருவி நிற்கிறது. நீயே கால மெல்லாம் கொடிகட்டிக் கொண்டு பறக்க முடியும் என்று கனவு காண்பது வீண்.