பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60

வேண்டும். பின்பு தெளிவு பெறவேண்டும். அத் தெளிவே அறிவுக்கு வித்தாகும்.

எந்தப் பொருளாயினும் அஃது எத்தகையது ஆயினும் அதன் இயல்பு யாது? அஃது எங்கே கொண்டு சென்றுவிடும்? அதனால் உண்டாகும் நன்மைகள் யாவை? அவை அறத்தின் அடிப்படையில் அமைந்தனவா? இன்பமும் பொருளும் கிடைக்குமா? என்று பலவகையாலும் ஆராய்ந்து தெளிவு பெறவேண்டும். இவற்றோடு வீடுபேற்றுக்கு வழி வகுக்குமா என்ற ஆய்வும் அமைதல் வேண்டும். மொத்தத்தில் நன்மை பயப்பது மெய்ப்பொருள்; தீமை தருவது பொய்ப்பொருள் ஆகும். பயனற்றவை என்று தெரிந்தால் அவற்றினின்று விலகுவது நன்மை தரும்.

நம்மை அறியாமையிலும், தீய வாழ்க்கையிலும் செலுத்துவன மூன்று மனநிலைகள்; அவை: ஒன்று காமம், மற்றொன்று சினம், மூன்றாவது மயக்கம். காமம் என்பது விருப்பம்; சினம் என்பது விரும்பிய பொருளைப் பெறாமையால் வரும் மன உளைச்சல்; மயக்கம் என்பது திரிபுபட உணர்தல். இவை மூன்றும் நம்மிடம் இடம் பெறாமல் தடுத்தால் வாழ்வில் ஏற்படும் பல்வகைத் துன்பங்களையும் தவிர்க்க முடியும். துன்பங்களுக்குக் காரணமாவது பிறப்பு என்னும் தளை. அதனின்று விடுபட இத் தீமைகளினின்று விடுபட வேண்டும். அவ் விடுபடும் அறிவே மெய்யுணர்வு என்று கூறப்படுகிறது.

37. அவா அறுத்தல்

ஆவல் என்பதனையே அவா என்று கூறுவர்; எதற்காகவாவது ஆசைப்பட்டுக் கொண்டே இருப்பது