பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66


அமைச்சர்களைத் தேர்ந்து எடுத்து அவர்கள் கூறும் கருத்துகளைக் கசப்பானதாக இருந்தாலும் செவிமடுத்துக் கேட்டு நல்லது கெட்டது ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

தக்க நண்பர்களைத் தேடி வலிமை சேர்த்துக்கொள்ள வேண்டும்; நட்பினை ஆராய்ந்து தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டுக்கு மதில், அகழி முதலிய அரண்களைச் சரிவர அமைத்துக் கொண்டு எதிரிகளின் தாக்குதல்களினின்று நாட்டைக் காப்பது அவன் கடமையாகும்.

நாட்டை ஆளும் அரசனுக்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இவை எப்பொழுதும் குறையவே கூடாது; அதற்கு விழிப்பு உணர்வு, கல்வி, துணிவுடைமை ஆகிய இம் மூன்றும் நிலைத்து இருக்க வேண்டும். அவன் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

ஆட்சி அறவழிகளில் இயங்க வேண்டும். நீதிக்கும் சட்டத்திற்கும் புறம் ஆகியவற்றை நீக்க வேண்டும். வீரம் குறையாத மானம் அவனிடம் நிலைத்து இருக்க வேண்டும். தன்னை இழித்துக் கூறினால் அவர்களை அழித்து ஒழிக்கச் செயல்பட வேண்டும். போர் தொடுக்க வேண்டும் எனில் அதற்கு அஞ்சக் கூடாது.

மக்களிடம் இனிய சொற்களைப் பேசி இரவலர்க்கும் புலவர்க்கும் ஏனைய கலைஞர்க்கும் ஈத்தளித்தலும் அவன் கடமையாகும்.

கொடை, அருள், செங்கோன்மை, குடிமக்களைக் காப்பது இந் நான்கும் உடையவனே பேரரசன் என்று பாராட்டப்படுவான்.