பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68

ஆகின்றனர்; கல்விக்குக் கரையே இல்லை; வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம். பயிற்றுவதும் இன்பம் பயப்பதாகும்.

செல்வம் மிகையானாலும் பகைதான் உண்டாகும்; அஃது அழியக் கூடியது; கைமாறக் கூடியது. கல்வி பலருக்கும் பயன்படுகிறது; ஏழு தலைமுறைக்கும் அது சென்று பயன்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத செல்வம் கல்வி ஆகும்.

41. கல்லாமை

கல்வி கல்லாத மூர்க்கரும் உலகில் உளர்; கண் விழித்துப் பார்க்காத குருடரும் உண்டு. கல்வி அறிவு பெற்றுத் திகழாதவர்கள் கல்லாதவர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவார்கள்; இங்குக் கல்லாதவர்கள் என்பது எழுத்து அறிவு இல்லாதவர்களை அன்று. கற்ற கல்வியே போதும் என்று நூலறிவை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளாதவரே கல்லாதவர் என்று குறிப்பிடப்படுகின்றனர். தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும்; கற்றவர்முன் திறம்படப் பேசும் தகுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சூது ஆடச் சென்றாலும் அதற்கும் காயும் கவறும் வேண்டும்; ஆடுவதற்கு வட்டப் பலகையும் வேண்டும். அதே போலச் சபைக்குச் சென்று நாலுவார்த்தை பேச வேண்டுமென்றாலும் நூலறிவு வேண்டும்; படிக்காமல் எதனையும் பேசிவிடமுடியாது. கல்லாதவன் கற்றவர் மத்தியில் பேசத் தொடங்குவது பருவம் அடையாத இளம் பெண் ஆடவரைக் கவர நினைப்பது போன்றது ஆகும்.