திருக்குறள் தெளிவுரை
பொருள்
சுற்றந் தழால்
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. 1
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும். 2
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது. 3
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல், ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும். 4
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான். 5
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை. 6
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு. 7
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். 8
முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாம்லிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும். 9
தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும். 10
106