உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் தெளிவுரை

பொருள்

பொச்சாவாமை

பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதை விடத் தீமையானதாகும். 1

நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும். 2

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும். 3

உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. 4

வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்ற போது தன் பிழையை நினைந்து இரங்குவான். 5

யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்று இல்லை. 6

மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை. 7

சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை. 8

தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும்போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும். 9

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும். 10

110