உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் தெளிவுரை

பொருள்

இடுக்கண் அழியாமை

துன்பம் வரும்போது (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத்துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப்போன்றது வேறு இல்லை. 1

வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும். 2

துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர். 3

தடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும். 4

விடாமல் மேன்மேலும் வந்த போதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப்போகும். 5

செல்வம் வந்தபோது 'இதைப் பெற்றோமே' என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது 'இழந்தோமே' என்று அல்லல்படுவரோ? 6

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார். 7

இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்பமுறுவது இல்லை. 8

இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை. 9

ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும். 10

128